குரூப் - 2 தேர்வில் 2,326 பேர் 'ஆப்சென்ட்'

நாமக்கல்:மாவட்டத்தில், 50 மையங்களில் நடந்த குரூப்-2, 2ஏ தேர்வில், 11,873 பேர் பங்கேற்ற நிலையில், 2,326 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (குரூப்-2, 2ஏ) பதவிகளுக்கான, முதல்நிலை தேர்வு, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய தாலுகாவில், 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை எழுத, 14,199 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும், துணை கலெக்டர் நிலையில், 4 -பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில், பஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நாமக்கல் கலெக்டர் மதுபாலன், நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, தாளம்பாடி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும் பார்வையிட்டார்.
நேற்று நடந்த தேர்வில், 11,873 பேர் பங்கேற்றனர். இது, 83.62 சதவீதம். நாமக்கல் தாலுகாவில், 1,002 பேர், ப.வேலுார் தாலுகாவில், 216, ராசிபுரம் தாலுகாவில், 591, திருச்செங்கோடு தாலுகாவில், 517 பேர் என, மொத்தம், 2,326 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.

Advertisement