சர்வர் பிரச்னையால் 76 டாஸ்மாக் கடைகள் அடைப்பு

கரூர்:காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள, 76 டாஸ்மாக் கடைகளும், மாலை திடீரென அடைக்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 76 டாஸ்மாக் கடைகள் மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக, 2 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பாட்டிலை ஒப்படைக்கும் போது அத்தொகை திரும்ப வழங்கப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்திற்கு பதிலாக, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி என்ற புதிய நடைமுறையை நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, பாட்டில் விற்பனையின் போதும், பாட்டிலை திரும்ப பெற்று, 10 ரூபாய் பணத்தை வழங்கும் போதும் ஒவ்வொரு பாட்டிலையும், மூன்று முறை ஸ்கேன் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளுக்கு தேவையான நவீன ஸ்கேனர் கருவிகளோ அல்லது கூடுதல் பணியாளர்களோ நியமிக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு கரூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த காலி பாட்டில்களை, 'ஸ்கேன்' செய்ய முயன்றபோது, 'சர்வர்' முற்றிலும் வேலை செய்யாமல் முடங்கியது. இதனால் பாட்டில்களை திரும்ப பெறுவதிலும், புதிய பாட்டில்களை விற்பனை செய்வதிலும் கடும் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட தொடங்கியது. நிலைமை மோசமடையவே, மாலை, 5:30 மணிக்கு மேல் கரூர் மாவட்டத்தில் உள்ள, 76 டாஸ்மாக் கடைகளும் முன்னறிவிப்பின்றி அவசரமாகப் பூட்டப்பட்டன.
இதுகுறித்து, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியோ தங்கதுரை கூறுகையில், ''புதிய தொழில்நுட்ப நடைமுறை காரணமாக சில இடங்களில், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டு, காலி பாட்டில்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டதும், அங்குள்ள வாடிக்கையாளர்கள் திறந்திருந்த பிற கடைகளுக்கு சென்றதால் அங்கும் கூட்டம் அலைமோதியது. இந்த தொழில்நுட்ப கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்படும்,'' என்றார்.

Advertisement