கோவையிலிருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானங்கள் அதிகரிப்பு
கோவை: கோவையிலிருந்து பெங்களூருவுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரட்டிப்பாக்கியுள்ளது. நேற்று முதல் இந்த எண்ணிக்கை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
கோவைக்கும் பெங்களூருவுக்கும் இடையே விமான போக்குவரத்தை அதிகப்படுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செப்.1 முதல் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இரண்டாவது கட்டமாக தற்போது நவ.1 முதல் கூடுதல் விமானங்களை இயக்குகிறது.
காலையில் பெங்களூருவில் 7.20 மணிக்கு புறப்படும் விமானம், கோவையை 8.25 மணிக்கு வந்தடைகிறது. காலை 9.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் விமானம், பெங்களூருவை 10.05 மணிக்கு சென்றடைகிறது.
மாலையில் பெங்களூருவிலிருந்து 7.10 மணிக்கு புறப்படும் விமானம், கோவையை 8.15 மணிக்கு வந்தடைகிறது. கோவையில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் விமானம், பெங்களூருவை 9.35 மணிக்கு சென்றடைகிறது. அக்.25 முதல் மாலை நேர விமான போக்குவரத்து துவக்கப்பட்டது; காலை நேர போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.
கோவைக்கும் பெங்களூருக்கும் இடையே தினமும் சென்று வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ விமானங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இரண்டாயிரம் இருக்கைகளாக உயர்ந்துள்ளதோடு, சரக்கு போக்குவரத்தின் கொள்ளளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. 30 சதவீத பயணிகளின் இருக்கை வசதிகள் உயர்ந்துள்ளது; போட்டியான டிக்கெட் விலையும் பயணிகளுக்கு கிடைக்கும்.
இரண்டு நகரங்களுக்கும் இடையே வணிக போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச பயணிகளுக்கான வசதி, போன்றவை அதிகரிக்கும். காலையில் சென்று மாலையில் திரும்புவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.