ராமகுளத்தை துார்வார வலியுறுத்தல்: இரு துறைகள் இழுபறியால் சிக்கல்

உடுமலை: மடத்துக்குளம் அருகேயுள்ள ராமகுளத்தை துார்வாரி, கூடுதல் நீர் சேமிக்க, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அமராவதி அணையிலிருந்து ராமகுளம் கால்வாய் மற்றும் நவ்வால் ஓடை வழியாக, 118 ஏக்கர் பரப்பளவுள்ள ராமகுளத்திற்கு நீர்வரத்து உள்ளது.

இக்குளத்தின் வாயிலாக நேரடியாக, 1,388 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதோடு, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிலுள்ள, விவசாய கிணறு, போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

வாய்க்கால் பராமரிப்பு மற்றும் பாசன நீர் மேலாண்மை அடிப்படையில், ராமகுளம் பழைய வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

ஆனால், குளத்தின் ஆவணங்கள் அடிப்படையில், இக்குளம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 50 ஏக்கருக்கு மேல் உள்ளதால், நீர்வளத்துறைக்கு சொந்தமானது எனவும், வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு நிலம் ராமகுளம் என்ற குறிப்பும் உள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரு துறைகளும் கண்டு கொள்ளாததால், பல ஆண்டுகளாக துார்வாரப்படாத நிலையில், பல அடி உயரத்திற்கு வண்டல் மண் தேங்கி, நீர் தேங்கும் பரப்பளவு பெருமளவு குறைந்துள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பு அதிகரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், கரைகள் வலுவிழந்து, உடையும் அபாய நிலையில் உள்ளது.

எனவே, அரசுத்துறைகள் இணைந்து, குளத்தை துார்வாரவும், கால்வாய் கரைகளை வலுப்படுத்தவும், 10 கி.மீ., துாரம் அமைந்துள்ள நீர்வரத்து வாய்க்காலை புதுப்பிக்கவும் வேண்டும், என, குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

அதற்கு, குளத்தை துார்வாரவும், பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோட்டாட்சியர் குமார் உறுதியளித்தார்.

Advertisement