இருக்கு... ஆனா இல்ல... போட்டி அரசியலில் கண்டுகொள்ளாத கட்சிகள்: பயன்பாடின்றி திண்டிவனம் பஸ் நிலையம்

திண்டிவனத்தில் நீண்ட காலமாக நிரந்தர பஸ் நிலையம் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிதான் பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. பஸ் நிலையம் கட்டுவதற்காக நகராட்சிக்கு சொந்தமான இடம், சென்னை ரோட்டில் இருந்தும் அரசியல் காரணங்களுக்காக நகராட்சி பஸ் நிலையம் கட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு விழா பேருந்து நிலையம் என பெயர் பொறிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த காங்.,கட்சியினர், ஏற்கனவே திண்டிவனத்தில் இருந்த அன்னை இந்திராகாந்தி பஸ் நிலையம் செயல்படாமல் உள்ளதால், புதிய பஸ் நிலையத்திற்கு அன்னை இந்திரா பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என அப்போதிருந்த முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து தி.மு.க.,வினரின் எதிர்ப்பை மீறி ஏற்கனவே நுழைவு வாயிலில் பொறுத்தப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு விழா பஸ் நிலையம் என பெயரை அப்புறப்படுத்திவிட்டு, 'அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம்' என்று பெயர் மாற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள் சாலை மறியல் செய்தும், மீண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படவில்லை.

நீண்ட காலத்திற்கு பிறகு நகராட்சி பஸ் நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பே, பெயர் வைப்பதில் தி.மு.க.,விற்கும், காங்.,கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., கட்சி வெளியேறியது.

பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த பிப்ரவரி ,மாதம் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகை முற்றிலும் குறைந்து விட்டதால் பஸ் நிலையம் பெரும்பாலான நேரங்களில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

புதிய பஸ் நிலையம் தி.மு.க., ஆட்சியின் போது திறந்து வைக்கப்பட்டாலும், கருணாநிதி பெயர் புறக்கணிக்கப்பட்டதால் தி.மு.க.,வின் நகரமன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களும் புதிய பஸ் நிலையம் நன்றாக செயல்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை.

இதே போல் இந்திரா காந்தி பெயரில் உள்ள பஸ் நிலையம் நன்றாக செயல்படுவதற்கு, தற்போது த.வெ.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்., கட்சியும் முனைப்பு காட்டாமல் மவுனம் காத்து வருகிறது. மொத்தத்தில் பஸ் நிலையம் இருக்கு... ஆனா இல்லை... என்ற நிலையில்தான் உள்ளது.

Advertisement