மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகம்: கிராமங்களில் கொந்தளிப்பு
குடிமங்கலம்: திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிலவும் பிரச்னைகளால், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது; தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் அக்கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்கள், வறட்சியால் வறண்டுள்ளன.
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பற்றாக்குறை வினியோகம் இருக்கும் போது, அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கின்றனர். இப்பிரச்னை நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டங்களில் எதிரொலித்தது.
குறிப்பாக, பொட்டையம்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படும் கொங்கல்நகரம், புதுப்பாளையம், விருகல்பட்டி, அனிக்கடவு உள்ளிட்ட ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களில், குடிநீர் பிரச்னைக்காக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொங்கல்நகரம் ஊராட்சியில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிக்கடவு ஊராட்சிக்கு பொட்டையம்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, நாள்தோறும் 3 லட்சத்து 32 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும்; ஆனால், ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது என, ஆதாரங்களுடன் வந்த கிராம மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாதம் ஒரு முறை, ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைக்கும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி கிராமத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்தால், பயன்படுத்த முடியாத உப்பு தண்ணீரை, குடிநீராக வினியோகிப்பதை கண்டித்து மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
வேதித்தன்மைகள் மிகுந்த உப்பு தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவதால், மக்கள் பாதிக்கின்றனர். கூட்டுக்குடிநீர் திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விருகல்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளிலும் இப்பிரச்னை உள்ளது. மக்கள் புகாரையடுத்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் கிராமங்களில் ஆய்வு செய்து, பொட்டையம்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து ஆங்காங்கே உடைந்துள்ள பிரதான குழாயை சீரமைத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிக்கப்படும் என உறுதியளித்தனர்.
குடிநீர் வினியோகம் சீராகாவிட்டால், ஒவ்வொரு கிராமமாக போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.