தொடர் மழையால் நெல் நடவு பணிகள் மும்முரம்

போடி: போடி அருகே முந்தல், மேலப்பரவு, மீனாட்சிபுரம் பகுதியில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் விவசாயிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழையால் சாமி குளம், சங்கரப்பன், செட்டிகுளம் பங்காருசாமி, மீனாட்சியம்மன் கண்மாயல் நீர்த்தேக்கம் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மீனாட்சிபுரம், பொட்டல் களம், முந்தல்,மேலப்பரவு உள்ளிட்ட பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனர். மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் தேங்கி வருவதால் ஆண்டு தோறும் ஒருபோக நெல் சாகுபடி தாராளமாக நடைபெறும். நாற்றாங் கால் அமைத்து நெல் நடவு செய்யப் படும் பணியானது 25 முதல் 35 நாட்கள் வரை நடக்கும். தற்போது வயல்களில் நெல் நடவு நடந்து வருவதால் பெண் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது:மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் தேங்கி ஆண்டு தோறும் முதல் போக நெல் நடவு பணிகள் நடக்கும். நெல் அறுவடைக்கு பின் சோளம், மக்காச் சோளம் பயிரிடப்படும். பங்காருசாமி, சங்கரப்பன், மீனாட்சியம்மன் கண்மாயில் நீர்த்தேக்கம் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நெல் நடவு பணிகள் நடந்து வருவதால் விவசாயிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர் என்றார்.

Advertisement