கடலாமை கண்காணிப்புக்கு ரூ.30 லட்சம் விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கடலாமைகளுக்கு 'டெலிமெட்ரி' என்ற கண்காணிப்பு கருவி பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் திட்டத்துக்கு, 30 லட்சம் ரூபாய் விடுவிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில், ஆண்டுதோறும் டிச., முதல் ஏப்., வரை கடலாமைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட மாதங்களில் கடலாமைகள் முட்டையிடுவதற்காக, அதிக அளவில் கரைக்கு வந்து செல்லும்.

இதில் கடந்த சில ஆண்டுகளாக கடலாமைகள் இறப்பது அதிகரித்தது. இதனால், கடலாமைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறை முடிவு செய்தது. இதற்காக, செயற்கைகோள் இணைப்புடன் செயல்படும், 'டெலிமெட்ரி' கருவிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2025ல் தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, 2025 - 26ம் நிதி ஆண்டில் முதல் கட்டமாக, 10 கடலாமைகளுக்கு டெலிமெட்ரி கருவிகள் பொருத்தப்பட்டன. இதன் வாயிலாக, கடந்த ஆண்டு ஒரு சில கடலாமைகள், தமிழக கரைக்கு ஐந்து முறை வந்து சென்ற தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில், கடலாமைகள் குறித்த ஆய்வுக்கான, 26 - 27ம் ஆண்டுகளுக்கான நிதியை விடுவிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 30 லட்சம் ரூபாயை விடுவிப்பதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

Advertisement