சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவு: உயர்நிலை குழு அமைத்து முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க, உயர்நிலை குழு அமைத்து, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தேனி மாவட்ட சிறையில் இருந்து, 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சிறைகளில் நிலவும் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக, முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் விபரங்களின் அடிப்படையில், கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நாட்டின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் அடிப்படையில், எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயர்நிலை குழு அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உயர்நிலை குழுவிற்கு, முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி தலைவராகவும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சங்கர், சிறை துறை முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பர்.

இந்த உயர்நிலை குழு, தமிழகத்தில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும். தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்பிற்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்யும்.

தொழில்நுட்ப இடைவெளிகள், தற்போதைய பணிச்சுமைக்கு ஏற்ப, போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யும்.

பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.

இக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். சிறைகளின் பாதுகாப்பை போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும். பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement