வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது யூடியூபர் மதுமிதா மீண்டும் வீடியோ
நாகர்கோவில்: ‘வீழ்த்த நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நடக்காது; என்னை பற்றி பேச பேச நான் உயர்ந்து கொண்டே இருப்பேன்’ என, யூ டியூபர் மதுமிதா மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாகர்கோவில் அருகே தம்மத்துக் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மதுமிதா, 28. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, தன் பெண் குழந்தை மீது ரூபாய் நோட்டுகளை கொட்டுவது, ஏராளமான நகைகளை அணிந்து நகைக்கடைகளில் வலம் வருவது என வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். செப்., 24-ம் தேதி இவரது வீட்டில் புகுந்த கொள்ளையன் 118 பவுன் நகையை திருடி சென்றான்.
இது தொடர்பாக, ராஜாக்கமங்கலம் போலீசார் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கி பாண்டி, 30, உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மதுமிதாவின் ஆடம்பர வீடியோவை பார்த்தே அவரது வீட்டில் கொள்ளையடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மதுமிதா திருநெல்வேலியில் உள்ள ஸ்பா ஒன்றில் பணியாற்றிய போது தன்னை ஏமாற்றி நகைகளை பறித்துக் கொண்டதாக கான்ட்ராக்டர் ஒருவர் புகார் அளித்தார். இதன் மீது பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மதுமிதா கடந்த ஒரு மாதமாக எந்த வீடியோக்களையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.
தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், வழக்கம் போல் அதிக நகைகளை அணிந்து கொண்டு, குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘சீதையை தீக்குளிக்க வைத்தீர்கள்; அவர் தீக்குளித்த பிறகும் அவரை யாரும் நம்பவில்லை. அவதுாறுகள், கேலி கிண்டல் பேச்சுகளுக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். என்னைப்பற்றி பேச பேச நான் உயர்ந்து கொண்டே தான் இருப்பேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்; எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறோம். யாராலும் யாரையும் அழிக்க முடியாது.
‘ஒரு பெண் நன்றாக இருந்தால் அந்த குடும்பத்தை எப்படி வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. நானும் என் கணவர் மற்றும் குழந்தையும் எப்போதும் நன்றாகவே இருப்போம். கடவுள் ஒருவர் இருக்கிறார். அதனால் எங்களை யாராலும் அழிக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவோ அவதுாறாக பேசினார்கள். ஆனால், அவர் இரும்பு பெண்ணாக நிமிர்ந்து நின்றார்’ என, பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மதுமிதா இதுவரை 6,695 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவரை 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவரது வீட்டில் கொள்ளை நடந்த பிறகு அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
சில வீடியோக்களை 30 முதல் 35 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். நேற்று காலை அவர் வெளியிட்ட எட்டு வீடியோக்களையும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். அதில் ஒரு வீடியோவை மட்டும் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த எட்டு வீடியோக்களையும் சேர்த்து மொத்தம் 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், மதுமிதா மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு