பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை மூட எதிர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் விளக்கம்

ஓசூர்: ஓசூர், பத்தலப்பள்ளி மார்க்கெட்டை நவ., 12ம் தேதிக்குள் மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் விளக்கமளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த, 2003ம் ஆண்டு முதல், 200க்கும் மேற்பட்ட கடைகளுடன், பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் இயங்குகிறது.

இங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பால பணி நடக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்டும் கட்டப்படுகிறது.

அதனால், தற்போது ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல், வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மார்க்கெட்டை வரும், 12ம் தேதிக்குள் அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் ‘நோட்டீஸ்’ வழங்கியது.

ரூ.200 கோடி





இதுகுறித்து பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், 5,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும். கொரோனா காலத்தில் கூட, எவ்வித பிரச்னையுமின்றி மார்க்கெட் செயல்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கக்கூடாது என்பதற்காக, தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ‘பார்க்கிங்’ வசதி செய்துள்ளோம். அரசுக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. இந்த மார்க்கெட்டிற்கு அரசு நிலம் ஒதுக்கி, கட்டடம் கட்டி கொடுக்கவில்லை.

முழுக்க முழுக்க தனிநபர்களின் கூட்டு முயற்சியால், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்டை முழுமையாக வேறு இடத்திற்கு மாற்றினால், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

*எதிரான நடவடிக்கை இல்லை

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு, நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஓசூர் நகரின் போக்குவரத்து தேவைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எந்தவொரு தனிநபருக்கோ, வியாபாரிகள் சங்கத்திற்கோ எதிரான நடவடிக்கை இல்லை. சந்தையில் வியாபாரிகளின் நலன் முக்கியமானது தான். அதே நேரத்தில், ஓசூர் நகரின் ஒட்டுமொத்த மக்கள், தேசிய நெடுஞ்சாலையை நாள்தோறும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆகியோரின் பாதுகாப்பையும், போக்குவரத்து வசதியையும் புறக்கணிக்க முடியாது.

உரிமமின்றி சந்தை





நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாவட்ட நிர்வாகத்தின் கடமை. உரிமமின்றி சந்தையை நிரந்தரமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது.

ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும்போது, பத்தலப்பள்ளியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அச்சூழலில், மார்க்கெட்டிற்கு அதிக எண்ணிக்கையில் சரக்கு வாகனங்கள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்கள் வந்து செல்வது, போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும்.

அதனால், ஒட்டுமொத்த ஓசூர் நகர மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட், மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தபின், இரு மாதங்கள் போக்குவரத்தை கண்காணித்து, அதன்பின் சந்தையை மாற்ற முடிவெடுக்க, வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், கூடுதல் போக்குவரத்து அழுத்தம், தற்போது நிலவும் சாலை வசதிகளின் வரம்புகளை முன்கூட்டியே கருத்தில் கொண்டே, சந்தையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

உரிமமின்றி சந்தையை நிரந்தரமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும்போது, பத்தலப்பள்ளியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அச்சூழலில், மார்க்கெட்டிற்கு அதிக எண்ணிக்கையில் சரக்கு வாகனங்கள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்கள் வந்து செல்வது, போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும்.

Advertisement