கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட சிறையில், கைதி சாப்பிடும் தட்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகை, வெளிப்பாளையம், ஏழைப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 22; இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அடைக்கப்பட்ட வார்டில் சக கைதிகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் சிறைக்குள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல், தனக்கு சாப்பிட வழங்கப்பட்ட தட்டை ஆயுதமாக மாற்றி தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், சக்திவேலை மீட்டு, நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement