வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு தரச்சான்று பெற 50 சதவீதம் நிதியுதவி
சென்னை: தமிழகத்தில் இருந்து வேளாண் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சர்வதேச ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்குவதற்கான தரச்சான்றுகளை பெறுவதற்கான செலவில், 50 சதவீதத்தை மானியமாக வழங்க, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள், சர்வதேச ஒழுங்குமுறை விதிகளுக்கு இனங்க உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக, மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தரச்சான்று, ஏற்றுமதி சான்றுகளை பெற வேண்டும். அப்போது, அந்த பொருட்களை வெளிநாட்டினர் இறக்குமதி செய்வர்.
ஏற்கனவே குறைந்த முதலீட்டில் செயல்படும் சிறு, குறு நிறுவனங்களுக்கு தரச்சான்று பெற கூடுதல் செலவுகள் ஆவதால், பல நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்பிருந்தும், ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டாதது தெரியவந்துள்ளது.
எனவே, உணவு பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகளுக்கு, ஏற்றுமதிக்கான தரச்சான்றுகளை பெறுவதற்கான மொத்த செலவில், 50 சதவீதம் நிதியுதவியாக வழங்கும் திட்டத்தை, டி.என்.எபெக்ஸ் தொடங்க உள்ளது.
இந்தாண்டில், 300 நிறுவனங்களுக்கு இந்த மானிய உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், தமிழக வேளாண் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு, சர்வதேச அளவிலான சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.