சிதிலமடைந்துள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

நாமக்கல்: ‘சிதிலமடைந்த கோவில்களைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பூஜாரிகள் பேரவை மாநில தலைவர் ராஜா தலைமையில் நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களின் வருவாயிலிருந்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த சிறிய கிராம கோவில்களுக்கு, தீபம் ஏற்ற எண்ணெய் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கும்மேல், கும்பாபிஷேகம் நடத்தாமல், சிதிலமடைந்துள்ள கிராம கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில், பூஜாரிகள் பதிவு செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து, இணையதளம் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளுக்கு வழங்குவதுபோல, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கும், 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும்.

பூஜாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நலவாரிய அடையாள அட்டையை காண்பித்து, சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement