அரசுப்பள்ளியை சூழும் புகை: பேரூராட்சியால் மக்கள் அவதி

மடத்துக்குளம்: சங்கராமநல்லுார் அரசுப்பள்ளி அருகே, திறந்தவெளியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால், மாணவர்கள் பாதித்து வருகின்றனர்; பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லுாரில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அருகில், பேரூராட்சியின் குப்பைக்கிடங்கு உள்ளது.

கிடங்கில் குவியும் குப்பையை திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின்படி அப்புறப்படுத்தாமல், பேரூராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து எரிக்கின்றனர். பல மணி நேரத்துக்கு எரியும் குப்பைகளில் இருந்து வெளியாகும் புகையால், பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளும் திறந்தவெளியில் எரிக்கப்படுவதால் மாசு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அருகிலுள்ள குடியிருப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். ருத்ரபாளையம் செல்லும் ரோட்டில் பயணிப்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் வகையில், நாள்தோறும் புகை அப்பகுதி முழுவதும் பரவுகிறது. இது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரடியாக ஆய்வு செய்து, சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கவும், திடக்கழிவு மேலாண்மை முறைகளை பேரூராட்சியில் முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement