சோழவந்தான் தமிழாசிரியை சாதனை

சோழவந்தான்: தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த தமிழாசிரியை ராதா 40, அவ்வையாரின் கோட்டோவியத்திற்குள் அவர் எழுதிய பாடல்களை கண்ணாடி பிம்ப எழுத்துக்களாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த 'ஷ்யாம் ஆர்ட்ஸ் அகாடமி' சார்பில் சர்வதேச அளவில் குழு, தனிநபர் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் பங்கேற்று அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி பாடல்களை, கோடால் வரைந்த அவரது ஓவியத்திற்குள் எழுதினர்.

இதில் தமிழாசிரியை ராதா மாற்று முயற்சியாக பாடல் வரிகளை 6:37 மணி நேரத்தில் ‘கண்ணாடி பிம்ப’ எழுத்துகள் போல மாற்றி எழுதி சாதனை படைத்தார். இதனால் இவரது எழுத்துக்களை கண்ணாடியால் பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்.

தமிழாசிரயை கூறியதாவது: பதினாறு ஆண்டுகளாக தமிழாசிரியையாக பணிபுரிவதோடு, காஞ்சி மடத்தின் சீடராகவும் உள்ளேன். தமிழ் மீதான பற்றால் கவிதை, சிறுகதைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளேன். இலங்கை வானொலியில் எனது கவிதைகள் அடிக்கடி வாசிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கிடையே தமிழார்வமும் வாசிப்பு, எழுத்து பழக்கங்களும் குறைந்து வருகிறது. இதனை மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இதனைச் செய்கிறேன். என்றார்

Advertisement