பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு

சென்னை:

மாநிலத்தின் மின் கட்டமைப்பை பலப்படுத்தவும், தூய பசுமை எரிசக்தி பயன்பாட்டை விரைவுபடுத்தவும் 'தமிழ்நாடு பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புக் கொள்கை 2026' (Tamil Nadu Battery Energy Storage Systems Policy, 2026) திட்டத்திற்கு தமிழக அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பெருநிறுவனங்களின் தனியார் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்ப்பதன் மூலமும், மின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதன் மூலமும், இந்தியாவின் முதன்மை எரிசக்தி சேமிப்பு மையமாகத் தமிழ்நாட்டை மாற்றுவதே இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

இக்கொள்கை அமலில் இருக்கும் காலத்தில், மாநிலம் முழுவதும் குறைந்தது, 2.5 ஜிகாவாட் (GW) அல்லது ஒரு மணி நேரத்திற்கு 10 கிகாவாட் (GW) பேட்டரி சேமிப்புத் திறனை உருவாக்குவதைக் குறிக்கோளாக அரசு நிர்ணயித்துள்ளது.

மின் விரயத்தைத் தடுக்க திட்டம்

'தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்' (TNGECL) என்ற ஒருங்கிணைப்பு முகமையின் கீழ் இந்த முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. பருவநிலைக்கேற்ப மாறும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் உள்ள சவால்களைக் கையாள்வது, மின் கட்டமைப்பின் இயக்கத்தை மேம்படுத்துவது மற்றும் மின் உற்பத்திக் குறைப்பு, வீணடிப்புகளைத் (Curtailment) தவிர்ப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகமாகவும், மின் தேவை குறைவாகவும் உள்ள பகல் நேரங்களில் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து, அதிக மின்தேவை இருக்கும் நேரங்களில் (Peak Hours) விநியோகிப்பதன் மூலம் மாநிலத்தின் மின்தேவை தன்னிறைவை இக்கொள்கை பூர்த்தி செய்யும்.

முக்கிய சிறப்பம்சங்கள்

* இருவகை சேமிப்பு முறைகள்

மின் கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கப்படும் தனித்த பேட்டரி திட்டங்கள் (Standalone BESS) மற்றும் ஏற்கெனவே உள்ள சூரிய, காற்றாலை திட்டங்களுடன் இணைந்து அமைக்கப்படும் துணை பேட்டரி திட்டங்கள் (Co-located BESS) ஆகிய இரண்டிற்கும் தனித்தனி வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வரும் 2027 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் 1 மெகாவாட் (MW) மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட புதிய சோலார் மற்றும் ஹைப்ரிட் திட்டங்கள், அவற்றின் மொத்த திறனில் குறைந்தது, 10 சதவீதத்திற்கு இணையான பேட்டரி சேமிப்பு வசதியைக் கட்டாயமாக நிறுவ வேண்டும். மேலும், அந்த பேட்டரி அமைப்பானது தொடர்ந்து 4 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

10 ஆண்டுகள் கட்டண விலக்கு:

முதலீட்டாளர்களின் நிதிச்சுமையைக் குறைத்து, திட்டங்களை விரைவாகத் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், தகுதியுள்ள திட்டங்களுக்கு டிரான்ஸ்மிஷன் மற்றும் வீலிங் கட்டணங்களுக்கு (Transmission and Wheeling charges) 10 ஆண்டுகளுக்கு முழு கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை இக்கொள்கைக் காலத்திற்குள் தொடங்கப்பட்டு, சேமிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டிற்குள்ளேயே பயன்படுத்தப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சுற்றுச்சூழல், சைபர் பாதுகாப்பு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மின் மேலாண்மை அமைப்புகளைப் (Energy Management Systems) பயன்படுத்தி மின் கட்டமைப்பு அமைப்புகளின் இணையவழிப் பாதுகாப்பை (Cybersecurity) உறுதி செய்யவும், காலாவதியான பேட்டரிகளைப் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யவும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

Advertisement