தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்



சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பின், 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின், காங்., - வி.சி.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - இ.கம்யூ., - மா.கம்யூ., கட்சிகளின் ஆதரவுடன், தவெக கூட்டணி ஆட்சி அமைத்தது. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதி காலியாக உள்ளது.

அதிமுக சார்பில் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இவற்றில் மதுராந்தகம், தாராபுரத்தில் மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. இதில், தவெக தரப்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றனர். இதனால், சட்டசபையில் தவெக பலம், 109 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வேண்டி உள்ளது.

இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை, தீபாவளி பண்டிகைக்கு பின் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தொகுதிகளின், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்களுடன், தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் டிசம்பர் 20ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

மார்ச்சில் உள்ளாட்சி தேர்தல்!




ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய, 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம், கடந்த அக்.19ல் முடிந்தது. பிற மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம், கடந்த ஜனவரி மாதத்திலேயே முடிந்தது.




இதனால், வரும் ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, வார்டு வரையறை பணிகள் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை, வரும் மார்ச் மாதம் நடத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.



Advertisement