ராகுல் பொதுக்கூட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம்

1

புதுடில்லி:

தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உட்பட பல்வேறு விவகாரங்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, காங்., சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி டில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, டில்லி ராம் லீலா மைதானத்தில், 'இண்டி' கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., - எம்.பி., பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்., தலைவர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக டில்லியின் கன்னாட் பிளேசில் இருந்து ராம் லீலா மைதானம் வரை இண்டி கூட்டணி தலைவர்கள் திறந்தவெளி வாகனத்தில் சென்றனர். இதிலும், திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இண்டி கூட்டணி ஏற்பாடு செய்த இந்த பொதுக்கூட்டம் காரணமாக ராம் லீலா மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி வியாபாரம் சூடுபிடிக்கும் தருணத்தில், அரசியல் பொதுக்கூட்டம் நடத்துவதால், வர்த்தகம் வெகுவாக பாதிக்கும் என டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. எனினும், பொதுக்கூட்டத்தை இண்டி கூட்டணி கட்சிகள் ஒத்திவைக்காமல் நடத்தின. இதன் காரணமாக ஒரே நாளில், 11,000 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டதாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து வர்த்தகர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது:

இண்டி கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டம் காரணமாக, ராம் லீலா மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் 2.50 லட்சம் கடைகள் மூடப்பட்டன. மேலும், 25 முக்கிய சந்தைகளும் இயங்கவில்லை. ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் டில்லிக்கு சரக்குகளை வாங்க வரும் நான்கு லட்சம் வரையிலான மொத்த விலை மற்றும் சில்லரை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், ஏஜன்டுகள் உள்ளிட்டோர் போக்குவரத்து முடக்கம் மற்றும் கடைகள் அடைப்பு அச்சத்தால் வரவில்லை.

மொத்த விலை சந்தைகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லக் கூடிய 5,000க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயங்க முடியாமல் ஸ்தம்பித்தன. சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதும் பாதிக்கப்பட்டது. தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் டில்லியில் உள்ள அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் பரபரப்பாக நடக்கும். நாளொன்றுக்கு 10,000 கோடி ரூபாய் முதல் 12,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும்.

ஆனால், இந்த பொதுக்கூட்டத்தால் கடைகள், சந்தைகள் அடைக்கப்பட்டதன் மூலம் ஒரே நாளில் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கடைகள் திறந்து இருந்தபோதிலும், போக்குவரத்து மாற்றம், நெரிசல் போன்ற அச்சங்களால் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வியாபாரம் வெறிச்சோடியது.

வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட இந்த 11,000 கோடி ரூபாய் இழப்பீட்டை இப்போது யார் தருவார்? ஒத்திவைக்க கோரியும், அதை ஏற்காமல் ராகுல் பிடிவாதமாக பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி சமயத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் வர்த்தகம் பாதிக்கும் என டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ராகுலுக்கு நான்கு முறை கடிதம் அனுப்பப்பட்டது. அதில், நவ.10க்கு பின் பொதுக்கூட்டத்தை நடத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், வர்த்தகர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இண்டி கூட்டணி கட்சிகள் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தை நடத்தின. ராகுலும் வெறுமனே வீடியோ வெளியிட்டு, 'பொதுக்கூட்டத்திற்கு வருவோர் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என, கேட்டிருந்தார்.

பிரியங்கா புறக்கணிப்பு:

பா.ஜ., குற்றச்சாட்டு



காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புறக்கணிக்கிறார் என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் பொதுச்செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. ராகுலே, அவரைப் பேச விடாமல் தடுத்துள்ளார். கட்சியின், மாதிரி பார்லிமென்ட் நிகழ்ச்சியின் போதும், பிரியங்கா புறக்கணிக்கப்பட்டார். தவிர, ராகுலை, மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரியங்காவுக்கு, இரண்டாவது வரிசையில் நாற்காலி போடப்பட்டது. அங்கேயும், பேசுவதற்கு, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர்ந்து, 100வது முறையாகத், தன்னைத்தானே, மீண்டும் நிலைநிறுத்த முயலும் ராகுல், நாட்டு மக்களைப் பற்றியோ அல்லது காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ பேசாமல், பிரியங்காவைப் புறக்கணிக்கவே முயல்கிறார்.

இவ்வாறு, அவர், கூறினார்.

Advertisement