பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
திருப்பூர் : பஞ்சு இறக்குமதி வரிவிலக்கு சலுகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தால் மட்டுமே, பஞ்சு மற்றும் நுால் விலை குறைய வாய்ப்புள்ளதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜவுளித்தொழிலுக்குத் தேவையான பஞ்சு தடையின்றிக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) கொள்முதல் செய்யும் பஞ்சை வியாபாரிகளுக்கு விற்காமல், நுாற்பாலைகளுக்கு நேரடியாக வழங்க சட்டரீதியான நடைமுறை தேவை. உள்நாட்டில் பஞ்சு தேவை அதிகரிக்கும் நிலையில், உற்பத்தி குறைந்து வருவதால் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். தற்போது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிவிலக்கை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோருகின்றனர்.
ஓராண்டுக்கு நீட்டிப்பு
- சுப்பிரமணியன்
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்
இந்தியா 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அவை அமலுக்கு வரும்போது, ஏற்றுமதி ஆர்டர்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஆண்டு முழுவதும் பஞ்சு, நுால் சீராகக் கிடைப்பதுடன், விலையும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இரண்டு மாத வரிவிலக்கு அவகாசம் போதாது. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி, இதை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்.
------------------------
ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
- சண்முகசுந்தரம்.
'சைமா' தலைவர்
பஞ்சு இறக்குமதி அவசியமாகியுள்ள நிலையில், இரண்டு மாத வரிவிலக்கு போதாது. இறக்குமதி வரிவிலக்கை 2031ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும். நுால் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சி.சி.ஐ., உறுதி செய்வதுபோல், உள்நாட்டுத் தேவைக்கான பஞ்சு கிடைப்பதையும் வர்த்தகத்துறை உறுதி செய்ய வேண்டும்.
------------------------
புதிய கொள்கை
- முத்துரத்தினம்
'டீமா' தலைவர்
உற்பத்திச் செலவு 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிகரித்த நுால் விலை குறைய வேண்டும். பஞ்சு விலை நிலையாக இருந்தால், நுால் விலை உயர்வையும் தட்டுப்பாட்டையும் தவிர்க்கலாம். இதற்காக பஞ்சு நிர்வாகத்தில் மத்திய அரசு புதிய கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
------------------------
நீட்டிக்கலாம்...
- ரவிச்சந்திரன்
உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் பொது செயலாளர்
தற்போதைய நிலையைச் சமாளிக்க இரண்டு மாதங்களுக்கு வரிவிலக்கை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், நுால் விலை உயர்வைத் தடுக்க, 2027 செப்டம்பர் வரை வரிவிலக்கை நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் இறக்குமதி மூலம் பஞ்சு தேவையைப் பூர்த்தி செய்து, பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வைத் தவிர்க்க முடியும்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்