நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

2

சென்னை: நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்.25ம் தேதி பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. 2ம் கட்டமாக திருச்சி, மதுரை, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவ.1ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில், ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டார். ஆரம்பம் முதல் இறுதி வரை பேரணியில் பங்கேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது;

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஜாதி, பணத்தின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவது இல்லை. யாருக்கும் சிறப்பான அந்தஸ்தையும் வழங்குவது இல்லை. 2023ம் ஆண்டு டிசம்பரில் வெள்ளம் ஏற்பட்ட போது, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

ஹிந்துக்கள் அல்லாத பகுதிகளிலும் கூட, சேவா பாரதி போன்ற அமைப்புகளின் வழியாக நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சேவையாற்றினர். நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு உரையாற்றினார்.

ஆர்எஸ்எஸ் பேரணியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும், பாஜ தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி போட்டோக்களுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றது மகிழ்ச்சி. தேசபக்தி, ஒழுக்கம், ஒற்றுமை, தன்னலமற்ற சேவை ஆகிய விஷயங்களை பேரணி வெளிப்படுத்தியது.

இவ்வாறு ஆனந்தன் அய்யாசாமி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement