ரூ.22,000 கோடி வெளிநாட்டு நிதியில் மத அமைப்புகளுக்கு செல்வது 6% தான்: பார்லி., கூட்டுக்குழு தலைவர் தகவல்
ஷில்லாங்: “நம் நாட்டிற்கு, வரும் 22 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியில், சர்ச்சுகள் உட்பட மத சார்பு அமைப்புகளின் பங்கு 6 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள தொகை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு செல்கின்றன,” என, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா குறித்த பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவரும் பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத சார்பு அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியின் பயன்பாட்டை முழுமையாக கண்காணித்து, அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, எப்.சி.ஆர்.ஏ., திருத்த மசோதாவை, லோக்சபாவில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் குறித்து நாடு முழுதும் மக்களிடமும், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் நேரடியாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு சென்ற பார்லி கூட்டுக்குழு, அங்குள்ளவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது.
அதன்பின் செய்தியாளர்களிடம் அக்குழுவின் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
எப்.சி.ஆர்.ஏ., மசோதாவில் முன்மொழியப்பட்ட சட்டங்கள், எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் இலக்காக கொண்டது அல்ல; வெளிநாட்டு நிதியுதவி பெறுவதை முறைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளது. எங்களிடம் முன்வைக்கப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளைக் காண விரும்புகிறோம். எங்களின் முதன்மை நோக்கம், நாட்டின் நலன் தான். எனவே, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு வருகிறோம்.
நம் நாட்டிற்கு, வரும் 22 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியில், 6 சதவீதம் மட்டுமே சர்ச்சுகள் உட்பட பிற மத சார்பிலான அமைப்புகளுக்கு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மிரட்டியே பண வசூலித்தாரா அரசகுமார்? எனக்கு தெரியாது என்கிறார் மகேஷ்
-
ஆசியாவின் டாப் 100 பல்கலை பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு, 5 ஐஐடிக்கள்; முழு விவரம் இதோ!
-
போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை
-
அனல் மின் நிலையங்களில் 1,400 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
-
விடுதிகளில் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
-
விபத்தில் பலியான முதியவரின் உடல் தோண்டி எடுப்பு