ரயில்களில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா 6 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

சேலம்; வடமாநிலங்களில் இருந்து, சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில், போதை பொருட்களை தடுக்க, ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று தனிப்படை போலீசார் பிரபாகரன், தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில், தன்பாத்-
ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.

கருப்பூரில் ஏறி, சேலம் வரை சோதனை நடத்தினர். அதில், பின்பக்க பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த, பேக்கை எடுத்து சோதனை செய்த போது அதில், 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல், திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த, பிளாஸ்டிக் கவரில், 6 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை, சேலம் ரயில்வே போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து, சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
* சேலம் அஸ்தம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜான்சன்பேட்டை காக்காயன் சுடுகாடு அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் ஐஸ்வர்யா கார்டன், வாத்தியார் தோட்டத்தை சேர்ந்த முருகன், 30, என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் பையில், 1.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, 1.2 கிலோ கஞ்சாவை
பறிமுதல் செய்தனர்.

Advertisement