அரபுக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்

- நமது நிருபர் -

இஸ்ரேலின் பார்லிமென்டுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். அனைத்து ஓட்டுக்களும் எண்ணப்பட்ட நிலையில் நெதன்யாகுவின் அணி 53 இடங்களையும், எதிர்க்கட்சி 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் பெற்றுள்ளன. எந்த அரசியல் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சவாலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆட்சி அமைக்க தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆட்சி அமைக்க அரபு கட்சிகளின் ஆதரவை சார்ந்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரபுக் கட்சிகளை சார்ந்த கூட்டணிக்கு இடமில்லை என நெதன்யாகு திட்டவட்டமாக முடிவை தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரபுக் கட்சிகளைச் சார்ந்திருக்கும் ஒரு அரசாங்கத்தை விரும்பவில்லை. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, தேசிய அரசை உருவாக்கத் தயாராகவே இருக்கிறோம்.

யூத மக்களில் பெரும்பான்மையினர், எங்களது லிகுட் கட்சியை மிகப்பெரிய கட்சியாகவும், என்னை பிரதமராகவும் தேர்ந்தெடுத்து, அடுத்த அரசை வழிநடத்த ஆணையிட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடனும், பயங்கரவாதத்தை ஆதரிக்காத மற்றும் எங்களுடன் இணைந்து செயல்பட விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து அரசை உருவாக்க விரும்புகிறோம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.

Advertisement