மனமகிழ் மன்றத்தில் குவிந்தவர்களால் தள்ளுமுள்ளு பாட்டிலுக்கு ரூ.70 வரை கூடுதலாக வாங்கியதாக புகார்

அரூர்; அரூரில், மனமகிழ் மன்றத்தில் மது வாங்க குவிந்த குடிமகன்களால், தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். அதே நேரம், பாட்டிலுக்கு, 70 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில், காலி பாட்டில்களை திரும்ப பெறும்போது அதை கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும், 1,000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் யு.பி.ஐ., மூலம் பணம் செலுத்த வேண்டும் போன்ற, புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, 2வது நாளாக, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று, தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், சிந்தல்பாடி, கோட்டப்பட்டி, பாலக்குட்டை, சிக்களூர், பாளையம் உள்ளிட்ட இடங்களில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள், அரூரில் காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை இயங்கும் மனமகிழ் மன்றங்களில் மதுவாங்க குவிந்தததால், கூட்டம் அலைமோதியது. அரூர் நான்குரோட்டிலுள்ள மனமகிழ் மன்றத்தில் மது வாங்க வந்தவர்களால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மதியம், 1:00 மணிக்கு அங்கு வந்த அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, டி.எஸ்.பி., சதீஸ்குமார் ஆகியோர் மதுவிற்பனையை சிறிது நேரம் நிறுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து, மனமகிழ் மன்ற நுழைவாயில் மூடப்பட்டது. பின், மது வாங்க கூடியிருந்தவர்களை கலைந்து செல்ல போலீசார் கூறினர். தொடர்ந்து மதியம், 2:00 மணி முதல் மீண்டும், போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியது. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது
பானங்களை வாங்கிச் சென்றனர். பாட்டில் ஒன்றுக்கு, 70 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக குடிமகன்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement