திருமழிசையில் டெங்கு பாதிப்பால் அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருமழிசை: திருமழிசை பேரூராட்சி பகுதியில், டெங்கு காயச்சல் பாதிப்பால் அரசு பள்ளி மாணவன் உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி மேல்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 40. இவருக்கு, தேவி என்ற மனைவியும், மணிகண்டன், 12, மற்றும் சந்தோஷ்குமார், 10, என, இரு மகன்களும் உள்ளனர்.

இதில், மேல்மாநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ்குமார், பள்ளி விடுமுறையை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி, திருமழிசை பேரூராட்சி, ஜெகந்நாதபுரத்தில் உள்ள பாட்டி கலா, 65, என்பவரது வீட்டிற்கு வந்தார்.

கடந்த 25ம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்தோஷ்குமார், திருமழிசை அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

பின், 27ம் தேதி, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

ரத்த பரிசோதனை முடிவின்படி, சந்தோஷ்குமாருக்கு 29ம் தேதி டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதனால், அன்றைய தினமே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தோஷ்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

Advertisement