170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா

சென்னை: ராயபுரம் ரயில் நிலையத்தின் 170 ஆண்டு கால பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், எழும்பூரில் இருந்து ராயபுரத்திற்கு பழங்கால நீராவி ரயில் இன்ஜின், இன்று (நவ.,4) இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் பயணம் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தென் மாநிலங்களின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமை பெற்ற ராயபுரம் ரயில் நிலையம், 1856 ஜூன் 28ல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூலை 1ல் ராயபுரத்தில் இருந்து தற்போதைய வாலாஜா சாலை வரை, முதல் பயணியர் ரயில் இயக்கப்பட்டது. இதன் வாயிலாக தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இதன் 170 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில், ராயபுரம் ரயில் நிலையத்தில் இன்று, பாரம்பரிய விழா நடத்தப்பட்டது.

இதையொட்டி, எழும்பூரில் இருந்து ராயபுரம் வரை, ‘இ.ஐ.ஆர்.-, 22’ என்ற பழமையான நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சுப்பா ராவ், கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், சென்னை கோட்ட மேலாளர் ஷைலேந்திர சிங் ஆகியோர், கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில், ராயபுரம் ரயில் நிலையத்தின் பழைய புகைப்படங்கள் மற்றும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அறிவிப்பு பலகை, ஸ்டேஷன் மாஸ்டர் மேஜை, டிக்கெட் அச்சிடும் இயந்திரம் உள்ளிட்ட அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், பழங்கால சிக்னலுக்கான சாவிகள், தோல் பணப்பைகள், கை சிக்னல் விளக்குகள், எரிவாயு விளக்குகள் உள்ளிட்ட பொருட்களும், பார்வையாளர்களை கவர்ந்தன.

Advertisement