சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை, பா.ஜ., பெண் கவுன்சிலர் உமா ஆனந்தன் வாபஸ் பெற்றார்.

சென்னையில், திராவிட இயக்கம் சார்பில், கடந்த 2025ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் சமயங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க.,வில் கட்சி பொறுப்பு மற்றும் அப்போது வகித்து வந்த அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். அந்த மனு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பொன்முடி பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாக, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சமீபத்தில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் நேரில் ஆஜராகி, வழக்கை திரும்ப பெறுவதாக கூறி, மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘தன் பேச்சுக்கு, பொது வெளியில் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வழக்கை திரும்ப பெறுகிறேன். தவறுவது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ செயல் என்பதால், யார் வற்புறுத்தலுமின்றி, வழக்கை திரும்ப பெறுகிறேன். எனவே, பொன்முடியை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை,’ என கூறியிருந்தார்.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து உத்தரவிட்டார்.

Advertisement