பக்குவபட்டவர்களுக்கு இடையே தான் விவாதம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜூ பதில்

-சிறப்பு நிருபர்-

கடந்த வாரம் பிரதமர் மோடி,'' நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று சில சக்திகள் சதி செய்கின்றன. வெளிநாடு சென்று ரகசிய சந்திப்புகளை நடத்துவது யார்? இந்திய எதிர்ப்பு சக்திளை யார் ஆதரிக்கிறார்கள்?'' என்று குற்றம்சாட்டினார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல்,'' பிரதமர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். வெளிநாட்டின் உதவியால் தான் பிரதமர் ஆனீர்கள். உங்களின் நிதி அமைப்பை வெளிநாட்டினர் கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டு சமூக ஊடகங்கள் உங்களை ஆதரிக்கின்றனர். இது குறித்து வெளிப்படையாக விவாதத்திற்கு சவால் விடுக்கிறேன். எந்த மேடை, எந்த நேரத்திலும் தைரியம் இருந்தால் வரலாம்,'' எனக்குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ,'' இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதசார்பின்மை பற்றி பேசுவதும்,

பிரிவினைவாதிகள் இந்திய கொடியை ஏந்தி நிற்பதும்,

அராஜகவாதிகள் அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை காட்டுவதும் போன்றது ராகுலின் குற்றச்சாட்டு.

இந்தியாவின் எதிரிகளின் செயல்திட்டங்களை முன்னிறுத்திவிட்டு, மற்றவர்கள் வெளிநாட்டு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டுவது தன்னைத்தானே கேலிக்கு உள்ளாக்கி கொள்வதாகும். உயர்மட்ட அளவிலான விவாதங்கள், பக்குவப்பட்டவர்களுக்கு இடையே தான் நடக்கின்றன,'' எனக்கூறியுள்ளார்.

பாஜவின் சிஆர் கேசவன் வெளியிட்ட அறிக்கையில்,'' ராகுல் ஒரு மட்டமான மோசடிக்காரர். அவருடைய மூன்றாம் தரப் பொய்கள் எப்போதும் அவருக்கே பாதகமாக முடிந்து இறுதியில் அவரையே அவமானப்படுத்துகின்றன.

லோக்சபா தேர்தலுக்கு முன், 2023 ல் லண்டனில் பேசிய ராகுல்,'' இது வெறும் இந்திய போராட்டம் மட்டும் அல்ல,'' எனக்கூறி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை கோரினார்,'' எனக்கூறியிருந்தார்.

Advertisement