காக்கிச் சட்டையின் கருணை முகம்

1

நம் வாழ்வில் எதிர்பாராத சில தருணங்கள் நம் கண்ணீரை வரவழைக்கும்; வேறு சில தருணங்கள் நம் நெஞ்சை நெகிழ்ச்சியால் நிரப்பும். அப்படிப்பட்ட ஒரு அழகான, மனிதநேயம் ததும்பும் சம்பவம் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டம், எருமேலி மற்றும் காஞ்சிப்பள்ளிக்கு இடைப்பட்ட பகுதியில் அரங்கேறியது. காவல்துறையினரின் மீதான பொதுவான பிம்பத்தை முற்றிலுமாக மாற்றி, 'காக்கிக்குப் பின்னேயும் துடிக்கும் மனித இதயம் உண்டு' என்பதை உலகிற்குப் பறைசாற்றிய அந்த நாளின் நினைவுகள் இப்போதும் மனதை விட்டு அகலவில்லை.
அன்று வழக்கம் போல் எருமேலிப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயத்தில், அவ்வழியே பைக்கில் வந்துகொண்டிருந்த சுஜித் என்ற ஏழைத் தினக்கூலித் தொழிலாளியை நிறுத்தினர்.
தினமும் கூலி வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றும் சுஜித், தன் வண்டிக்குத் தேவையான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சரியாகவே வைத்திருந்தார். இருப்பினும், அவரது பைக்கில் 'ரியர் வியூ மிரர்' எனப்படும் பின்னோக்கிப் பார்க்க உதவும் கண்ணாடி பொருத்தப்படவில்லை. விதிகளின்படி இது ஒரு குறையாகக் கருதப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் முற்பட்டனர்.
தான் வைத்திருந்த ஆவணங்கள் சரியாய் இருந்தும், ஒரு சின்னக் குறைக்காக அபராதம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த சுஜித்தின் முகம் சுருங்கியது. அவரிடம் இருந்த குறைந்தபட்ச பணமும் அன்றைய நாளின் உணவுத் தேவைக்குரியதுதான். அந்தத் தொழிலாளியின் முகத்தில் தேங்கியிருந்த கவலையை எஸ்.ஐ. ரவீந்திரன் கவனித்தார்.
அதிகாரிகள் அன்பாக விசாரித்தபோது, சுஜித் தன் நிலையைக் கண்ணீருடன் விவரித்தார். அன்று தன் மகள் வைகாவின் நான்காவது பிறந்தநாள் என்றும், அவளுக்குக் கொடுக்கக் கைவசம் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில், யாரிடமாவது கடன் வாங்கி கேக் வாங்கிச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில்தான் இந்தச் சோதனையில் சிக்கியதாகவும் அவர் கூறினார். தன் வறுமையின் உச்சியிலும் மகளின் பிறந்தநாளைக் கொண்டாடத் துடிக்கும் ஒரு தந்தையின் தவிப்பைக் கேட்டு அங்கிருந்தவர்களின் நெஞ்சம் கனத்துப் போனது.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றாலும், மனிதாபிமானம் அதைவிடப் பெரியது என்பதை ரவீந்திரனும் அவரது சக காவல்துறை அதிகாரிகளும் நிரூபித்துக் காட்டினர். சுஜித்துக்கு அபராதம் விதித்துத் தண்டிக்காமல், அவரது குடும்பத்தின் வறுமையைப் புரிந்து கொண்டு அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.
உடனடியாகத் தங்களின் சொந்தப் பணத்தைத் திரட்டினர். அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு அழகிய கேக், சாக்லேட்டுகள் மற்றும் சிறுமிக்கு அழகிய புதிய உடை ஆகியவற்றை வாங்கிச் சுஜித்துடன் அவரது வீட்டிற்குச் சென்றனர்.Latest Tamil Newsவேலைக்குப் போன கணவன் போலீஸ் படையுடன் வீடு நோக்கி வருவதை அறிந்த குடும்பத்தினர் கண்களில் மிரட்சியோடு, "என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ" என்ற கனத்த கவலையுடன் நின்றனர். அக்கம் பக்கத்தினரின் நிலையும் அப்படியே பயத்துடனும் பீதியுடனும் நடக்கப் போவதைக் காணக் காத்திருந்தது.
சிரித்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் அதிகாரிகள் குழந்தை வைகாவுக்குப் புத்தாடை வழங்கினர். அந்தக் குழந்தைக்கு அந்தப் புத்தாடை மிகப் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அந்தக் குழந்தைக்கு அடுத்த ஆச்சரியமாகப் பெரிய கேக் காத்திருந்தது. கேக் வெட்டிய வைகாவுக்குப் பரிசாக மேலும் சில சாக்லேட்டுகளையும் கொடுத்துப் போலீசார் அசத்தினர்.Latest Tamil Newsகுழந்தை வைகா மட்டுமின்றி, அங்கு இருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் அகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி! சுஜித்தின் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. காவல்துறை அதிகாரிகளின் இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
சமூகத்தில் காவல்துறையினர் என்றாலே ஒருவிதக் கறாரான பிம்பம் நிலவும் சூழலில், எருமேலிப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் காவல்துறையின் மறுமுகத்தை, அதாவது மனிதநேயத்தின் அழகிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. விதிகளுக்கு உட்பட்டுத் தண்டிப்பது மட்டுமே காவல்துறை அல்ல; மக்களின் துயரத்தைப் புரிந்து கொண்டு அரவணைப்பதும் அவர்களது கடமையே என்பதை நிரூபித்த எஸ்.ஐ. சிஜோ ரவீந்திரன் மற்றும் அவரது குழுவினரின் செயல் என்றும் போற்றத்தக்கது தானே!
-எல்.முருகராஜ்

Advertisement