தமிழகம் - காசி இடையே நூற்றாண்டு தொடர்பு; காசி தமிழ் சங்கமத்தில் கவர்னர் அர்லேகர் பெருமிதம்

1

சென்னை ஐஐடி சார்பில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 5வது ஆண்டாக நவ.28 முதல் டிச.12 வரை நடக்கிறது.

இதன் முன்னோட்ட நிகழ்வு சென்னை ஐஐடியில் இன்று (நவ.3) நடைபெற்றது. இதில் கவர்னர் அர்லேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

தேசத்தின் ஒருமைப்பாடு பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான செயல்களையும் அவர் செய்து வருகிறார். அந்த வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

நம் மக்கள் அனைவரும் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு, புவியியல் ரீதியாக தொடர்புடையவர்கள். இதை நாம் மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் இந்நிகழ்ச்சி முக்கியமான ஒன்று.

கலாசாரம், ஆன்மீகம் ரீதியாக, தமிழ்-காசி இடையே பல நூற்றாண்டு கால தொடர்புகள் உள்ளன. நம் நாடு கலாசாரங்கள் பல நிறைந்த தேசம். பாரம்பரியம் வேறு, வேறாக இருந்தாலும் பாரதம் என்ற கலாசாரம் ஒன்றுதான்.

காசியுடன் தமிழகம் மட்டுமல்லாது சவராஷ்டிரம், மஹாராஷ்டிரம், ஒடிஷாவும் நீண்ட கால தொடர்புகள் வைத்துள்ளன.

இவ்வாறு கவர்னர் அர்லேகர் பேசினார்.

Advertisement