பட்டா மாறுதலில் நீடிக்கும் குழப்பத்தால் மக்கள், வி.ஏ.ஓ.,க்களிடையே முரண்பாடு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பட்டா மாறுதல் சம்பந்தமாக வி.ஏ.ஓ.,க்களுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடும், சர்ச்சையும் எழுவது வாடிக்கையாக உள்ளது. திருவாடானை பகுதியில் கிராமப் புறங்களில் நிலம் வாங்கியோ அல்லது வாரிசுரிமை அடிப்படையிலோ பட்டா மாறுதல் பெறுவது இன்றளவும் பலருக்கு நீண்ட போராட்டமாகவே உள்ளது. மக்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு இடையே இது தொடர்பாக ஏதேனும் ஒரு முரண்பாடும், சர்ச்சையும் எழுவது வாடிக்கையாக அமைந்து வருகிறது.
நிலம் வாங்கியவர் அல்லது வாரிசுதாரர் ஒருவர் ஆன்லைன் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து அவருக்கு பட்டா கைக்கு கிடைக்கும் வரை பல்வேறு சோதனைகளாகவே உள்ளது. ஒரு கையெழுத்திற்கு இவ்வளவு நாட்களா என மக்களம் புலம்புவதும், எல்லா ஆவணங்களையும் உடனடியாக எப்படி சரிபார்க்க முடியும் என அலுவலர்கள் எரிச்சலடைவதும் தினமும் நடக்கிறது.
ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் முறையான ஆவணங்கள் இருந்தாலும் கூட தங்களின் கோப்புகளை விரைந்து நகர்த்த பெரும் சிரமப்படுவதாக மக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம் வி.ஏ.ஓ.,க்களோ பல ஆண்டுகளுக்கு முந்தைய பட்டாக்கள் சரியாக பெயர் மாற்றப்படாத நிலங்கள் மற்றும் கூட்டு பிரிவினைகளில் உள்ள சட்ட ரீதியான சிக்கல்கள் கள ஆய்வின் போது தடையாக நிற்கின்றன என்கின்றனர்.
பட்டா மாறுதல் விவகாரத்தில் நிலவும் இந்த இழுபறிக்கு அரசு நடவடிக்கைகளை எடுப்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் காலவரையறை நிர்ணயித்து தாமதாகும் பட்சத்தில் சம்பந்தபட்ட அலுவலர்கள் மீது உரிய விளக்கம் கேட்கும் முறையை கொண்டு வரலாம். இது போன்ற நிலப்பிரச்னைகளில் கிராமங்களில் நிலவும் இந்த முரண்பாடுகளை தவிர்க்க அரசு வருவாய்த்துறையில் பட்டா மாறுதலுக்கு தனியாக ஒரு பிரிவையும் கள ஆய்வு செய்ய தனி அதிகாரிகளையும் நியமித்தால் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை குறைந்து மக்களுக்கு விரைவான சேவை கிடைக்கும் என்றனர்.