குவாரிகளில் ‘ட்ரோன்’ ஆய்வு முடிவுகள் வெளியிட தயக்கம்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் சரியான அளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என ‘ட்ரோன்’ பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் தனியார், அரசு புறம்போக்கு நிலங்களில் என 50க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கனிமங்கள் பல்வேறு அளவிலான ஜல்லிகள், எம்.சாண்ட் உள்ளிட்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும், கேரளாவிற்கும் அனுப்ப பட்டு வந்தது. இந்நிலையில் குவாரிகளி்ல அனுமதிக்கப்பட்ட அளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, கூடுதலாக எடுத்துள்ளனரா என ஆய்வு செய்ய கடந்த ஜூன், ஜூலையில் தாலுகா வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ட்ரோன் பயன்படுத்தியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு செய்கிறோம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதன் பின் நடவடிக்கைகள் இல்லை. இதுபற்றி கனிம வளத்துறை, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம் கேட்டாலும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்ற மழுப்பலான பதில்களை தெரிவிக்கின்றனர். கூடுதலாக கனிமம் வெட்டி எடுத்திருப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமம் வெட்டி எடுத்தவர்களுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிட தக்கது.

Advertisement