பனசலாறு திட்டத்தில் 10 லட்சம் லிட்டர்குடிநீர் தேனி நகராட்சியில் வினியோகம்: குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தல்

தேனி: தேனி நகராட்சி பகுதிகளுக்கு பழனிசெட்டிபட்டி, வைகை அணை குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. நகராட்சி பகுதியில் 15,417 குடிநீர் இணைப்புகள் உள்ளன. பழனிசெட்டிபட்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து நகராட்சி 30,31 உள்ளிட்ட வார்டுகளுக்கு வினியோகம் செய்கின்றனர்.

மற்ற பகுதிகள் வைகை அணை நீரை நம்பி இருந்தன. ஆனால், குழாய் பழுது, மின்சார துண்டிப்பு, மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. இந்நிலையில் பனசலாறு குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த குடிநீர் திட்டம் மூலம் இருநாட்களுக்கு ஒருமுறை 10 லட்சம் லி.,(ஒரு எம்.எல்.டி.,) குடிநீர் கிடைக்கிறது. இந்த குடிநீர் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மழைகாலம் என்பதால் பொதுமக்கள் குடிநீர் காய்ச்சி பருக வேண்டும். குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement