கல்வித்துறை கூட்டங்களில் வருகைபதிவு செய்ய கியூ.ஆர்., கோடு அமல்: மாவட்டத்தில் புதிய நடைமுறை

தேனி: மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆய்வு, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்போர் கியூ.ஆர்., கோடு மூலம் வருகை பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு துறை சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கும் துறை அலுவலர்கள் வருகை பதிவு செய்ய பதிவேடுகள் பயன்படுத்துவார்கள். அதில் பங்கேற்பவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்வர். ஆனால், தேனி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி கல்வித்துறையினர் கூறியதாவது: கூட்டம் நடைபெறும் அரங்க நுழைவாயிலில் அந்த கூட்டத்திற்கான வருகை பதிவு கியூ.ஆர்., கோடு ஒட்டப்படும். அதனை கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தால் படிவம் வரும் அதில் பங்கேற்பவர்கள் பெயர், வட்டாரம், பங்கேற்பவரின் நிலை(தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), அவர்களது எமிஸ் ஐ.டி., பள்ளியின் யூடைஸ் ஐ.டி., அலைபேசி எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும் நேரம் வருகை பதிவு நேரமாக கணக்கிடப்படும்.

இதன் மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் விவரங்கள் துல்லியமாக கிடைக்கும். மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட 5 கூட்டங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement