தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் ‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்

திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 7 முன்னோடி தொழில்நுட்பங்களை ஒரே மையத்தில் ஒருங்கிணைக்கும் புத்தாக்கம் மற்றும் சிறப்பு மையத் திறப்பு விழா நடந்தது.

கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் அசோக் குமார், தலைமை ஆலோசகர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். சென்னை மோனோலித் டெக்னாலஜிஸ் நிறுவன துணைத் தலைவர் கணேஷ் திறந்து வைத்தார். மாணவர் துாதுவர்களுடன் கலந்துரையாடல், தொழில்துறை வல்லுநர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

பேராசிரியர்கள் கூறியதாவது: கல்லுாரியின் ஏ.ஆர்.சி.எஸ்., ஸ்கில் இந்தியா ஊடக மற்றும் பொழுது போக்குத் திறன் கவுன்சில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆய்வகங்களை இணைத்து விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பம், டிஜிட்டல் ட்வின் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சிடுதல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என 7 முன்னோடி தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்தியாவின் முதல் பல்துறை மையமாகும்.

வழக்கமான ஆய்வகங்கள் ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் தனியாகக் கற்பிக்கும் நிலையில் இம்மையம் 7 முன்னோடித் தொழில் நுட்பங்களை ஒரே கூரைக்குள் ஒருங்கிணைத்துள்ளது. இதனால் மாணவர்கள் பல்வேறு பொறியியல் துறை சிக்கல்களுக்குத் தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பை பெறுவர் என்றனர்.

Advertisement