மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்ற ரூ.270 கோடிக்கு டெண்டர் 81 வார்டுகளில் ஏற்பாடு

மதுரை:"மதுரை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு, மறுசுழற்சி பணிகளுக்கு ரூ.270 கோடியில் புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிறுவனம் பொறுப்பேற்கும் வரை 'அவர்லேண்ட்' நிறுவனமே பணிகளைத் தொடரும்" என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினந்தோறும் 950 டன் குப்பை சேர்கிறது. இதனை அகற்றும் அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் நவ.15ல் நிறைவடைகிறது. இந்நிறுவனம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததுடன், துப்புரவுத் தொழிலாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து புதிய ஒப்பந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி மாநகராட்சி 1, 2, 3, 5 மண்டலங்களில் உள்ள 81 வார்டுகளில் குப்பை சேகரிப்பு, தரம் பிரித்தல், பதப்படுத்துதல் பணிகளுக்கு 18 மாதங்களுக்கு ரூ.270 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் 4, வார்டு 84ல் மட்டும் மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளர்களே துப்புரவுப் பணிகளை மேற்கொள்வர். 'டெண்டர்' முடிந்து டிசம்பர் முதல் புதிய நிறுவனம் பணிகளை மேற்கொள்ளும்.

ஆறு மணி நேரத்தில் தீர்வு

தத்தனேரி, கோச்சடையில் உள்ள குப்பை மாற்று நிலையங்கள், 38 நுண்ணுரக் கூடங்களை பராமரிக்கும் பொறுப்பும் புதிய நிறுவனத்திடம் வழங்கப்படும். குப்பை சேகரிப்பு வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., வசதி கட்டாயம். குப்பை புகார்களுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைத்து, ஆறு மணி நேரத்துக்குள் குறைகளைத் தீர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் ஒப்பந்தம் உடனே ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement