நிர்வாக சீர்கேடால் வருவாய் இழப்பு; விண்ணை முட்டுகிறது விலைவாசி: தவெக அரசு மீது பழனிசாமி புகார்

2

சென்னை: ''திறனற்ற த.வெ.க., அரசின் நிர்வாக கோளாறால், தமிழகம், ஜி.எஸ்.டி., வரி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், விஜய் தான் முதல்வர். எனவே அவர், எல்லா தொகுதிகளுக்கும் சென்று, மக்களைப் பார்த்து, அங்குள்ள பிரச்னைகளைத் தீர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் விஜய், இடைத்தேர்தல் நடக்க உள்ள பகுதிகளுக்கு மட்டும் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அவர், தேர்தலை நோக்கி தான், பிரசாரம் மேற்கொள்கிறார் என நன்றாகவே தெரிகிறது. வளர்ச்சியடையாத பல மாநிலங்களில், ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்துள்ளது.

வளர்ச்சியடைந்த தமிழகத்தில், வரி வருவாய் மூன்று சதவீதம் தான் உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிர்வாக கோளாறுடன், திறனற்ற அரசாக செயல்படுவது தான் இதற்கு காரணம்.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களில், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. அரிசி விலை, கிலோவுக்கு 25 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. சர்க்கரை, பருப்பு, எண்ணெய், புளி, மளிகை பொருட்களின் விலையும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது.

'ஆவின்' தயாரிக்கும் இனிப்புகள் தரமாக இருக்கும் என, தீபாவளி நேரத்தில், மக்கள் அதிகமாக வாங்குவர்; அவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நிர்வாகத் திறன் இல்லாததால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி நேரத்தை வீணடிக்கின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திறனற்ற இந்த ஆட்சியால், மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement