டில்லி பேரணியில் பலம் காட்ட முடியாமல் மாநில கட்சிகளிடம் மண்டியிடும் காங்கிரஸ்?

5

- நமது நிருபர் -

டில்லியில் நடந்த, 'இண்டி' கூட்டணி பேரணியில், பலத்தை காட்ட முடியாததால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மாநில கட்சிகளிடம் மண்டியிட வேண்டிய நிலை, காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில், காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு, 10 லட்சம் பேரை திரட்டுவதே இலக்கு என, காங்., தலைவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அந்த பேரணியில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாக, டில்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய உளவு போலீசார், ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றதாக கணக்கிட்டுள்ளனர்.

காங்கிரஸ் எதிர்பார்த்தபடி, 10 லட்சம் பேர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்., மார்ச் மாதங்களில், உ.பி., கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அந்த தேர்தல்களில், தனித்துப் போட்டியிட, காங்கிரஸ் விரும்பியது. அதற்கான பலத்தை காட்டும் வகையில், டில்லி பேரணி அமையும் என்றும் எதிர்பார்த்தது.

ஆனால், பேரணியில் பலம் காட்டுவதில், தோல்வி அடைந்ததால், மீண்டும் கூட்டணி கட்சிகளின் தயவில் தான், அந்த தேர்தல்களை சந்திக்க வேண்டிய நெருக்கடி, காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உ.பி.,யில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், எத்தனை தொகுதிகளை ஒதுக்குகிறாரோ, அதைத்தான் காங்கிரஸ் பெற்று போட்டியிட வேண்டும். டில்லி பேரணியில் அகிலேஷ் பங்கேற்ற போதிலும், காங்., அழைப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு இல்லை. எனவே, கூட்டணியில் இருக்கும், மாநில கட்சிகளிடம் பேரம் பேசும் வலிமையை காங்கிரஸ் இழந்துள்ளது.




இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: டில்லி பேரணி, தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. 'இண்டி' கூட்டணி கட்சிகள், காங்., தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், பேரணி வெற்றி பெறவில்லை. இதனால், வட மாநிலங்களில், மாநில கட்சிகளின் ஆதரவை தக்க வைப்பதில் சிக்கலும், தொகுதி பங்கீட்டில் காங்., விருப்பத்தை, கூட்டணி கட்சிகளிடம் காட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் த.வெ.க.,வுடன், தொகுதி பேரம் பேசாமல், கூட்டணியை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement