மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சாலை எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் சிறைபிடிப்பு

நல்லம்பள்ளி:இண்டூர் அருகே, மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கல்குவாரிக்கு அமைத்த சாலையில் சென்ற டிப்பர் லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள நாகர்கூடல் பஞ்., பாறைக்கொட்டாய் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் செயல்படுகிறது. இதற்கு செல்ல, உரிய அனுமதி பெற்ற சாலைகள் எதுவும் இல்லை. வனத்துறை நிலத்தின் வழியாக அமைத்த சாலைக்கு, வனத்துறையினர் தடை செய்தனர். இந்நிலையில், பட்டா நில உரிமையாளர் சம்மந்தப்பட்ட கிரஷருக்கு வழிவிட மறுத்ததால், வருவாய்த்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தின் வழியாக, 800 மீட்டர் துாரத்திற்கு மரங்களை வெட்டி, மண் சாலை அமைத்ததுடன், அதில், கனரக டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை எடுத்துச் சென்றனர்.
இதனால், பாறைக்கொட்டாய், பச்சேரியான் கொட்டாய், கரடிக்கால் குண்டு, இ.கே.,புதுார், கும்பளப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம விவசாய நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மேய்ச்சல் புறம்போக்கு நிலமும் அழிக்கப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை ஜல்லி ஏற்றிச்சென்ற, 11 கனரக டிப்பர் லாரிகளை சிறை
பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இண்டூர் வி.ஏ.ஓ., ராமசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, சிறைபிடித்த வாகனங்களை கிராம மக்கள் விடுவித்தனர்.

Advertisement