சிவப்பு புல் எறும்பை கட்டுப்படுத்த மக்களிடம் அதிகாரிகள் கருத்து கேட்பு
பாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம், முள்ளிக்காடு சுற்றுவட்டார பகுதியில் பெருகி வரும் சிவப்பு புல் எறும்பை கட்டுப்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, தர்மபுரி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வெங்கடசமுத்திரத்தில் தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி வெங்கடேசன், தாசில்தார் லட்சுமி, பாப்பிரெட்டிப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் நவீனா வேளாண் உதவி இயக்குனர் அருணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து துறை சார்பில் சிவப்பு புல் எறும்பு பாதிப்பு குறித்து துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள், மட்டைகளின் அடியில் எறும்பு பரவல் அதிகமாக உள்ளது. பாக்கு, தென்னை மட்டைகளை துாளாக்கும் இயந்திரம், இயற்கை முறையில் எறும்பை கட்டுப்படுத்த விவசாய இடுபொருள் வழங்க வேண்டும். பாக்கு தோட்டத்தில் ஆழமான உழவு பணி மேற்கொள்ள இயந்திரங்கள், மரங்களில், மருந்து தெளிக்க, மானியத்தில், 'ட்ரோன்' வழங்க வேண்டும். இப்பகுதி பள்ளி, வீடுகளில் எறும்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., மார்க்ரெட், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அனுஷா பேகம், பொதுப்பணித்துறை உதவி செய்ய பொறியாளர் மோகனப்பிரியா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் கலந்து
கொண்டனர்.