அரசு அலுவலக வளாகத்தில் உள்ள மசூதியை அகற்றுவது கட்டாயம்: டில்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: டில்லியில், ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தில் கட்டப்பட உள்ள பொது தலைமை செயலகக் கட்டடப் பணிகளுக்காக, கிருஷி பவன் வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு பழமையான, ‘கதீமி’ மசூதியை அகற்ற வேண்டியது கட்டாயம். மத்திய அரசு அலுவலக எல்லைக்குள் மத வழிபாட்டு அமைப்புகளை நிரந்தரமாக அனுமதிக்க முடியாது. அது, அரசு சொத்துகளின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
தலைநகர் டில்லியில், மத்திய அரசின், ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுமேம்பாட்டு திட்டத்தில், தற்போதைய சாஸ்திரி பவன் மற்றும் கிருஷி பவன் அமைந்துள்ள நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில், ஒருங்கிணைந்த பொது மத்திய தலைமை செயலகக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்காக, கிருஷி பவன் வளாகத்தில் அமைந்துள்ள, நுாற்றாண்டு பழமையான கதீமி மசூதியை அகற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. விசாரித்த நீதிபதி அனிஷ் தயாள் தலைமையிலான அமர்வு, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்:
கிருஷி பவன், மத்திய தலைமை செயலக வளாகம் ஆகியவை முழுக்க முழுக்க அரசு, நிர்வாகம் மற்றும் பொது சேவை பணிகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட மதச்சார்பற்ற பொது வளாகங்கள். மத்திய அரசு அலுவலக எல்லைக்குள் நிரந்தர மத வழிபாட்டு அமைப்புகளை அனுமதிப்பதோ அல்லது அதற்காக நிலத்தை கோருவதோ முற்றிலும் ஏற்க முடியாதது; அது, அரசு சொத்துகளின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கிருஷி பவன் வளாகத்தின் நிலம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1940 நவ., 8ல், மத்திய அரசு – ஜுமா மசூதி நிர்வாகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், வெறுமனே வழிபாட்டு நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கான அனுமதி சார்ந்த உடைமை மட்டுமே தவிர, நிலத்தின் மீது எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையையோ அல்லது பட்டாவையோ வழங்கவில்லை.
அரசின் நிர்வாக நிலத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என, யாரும் உரிமை கோர முடியாது என்பதால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 25 வழங்கும் மத வழிபாட்டு உரிமை எவ்விதத்திலும் மீறப்படவில்லை. கிருஷி பவன் வளாகத்தில் இருந்து, 2 கி.மீ., சுற்றளவுக்குள், இந்தியா கேட் அருகே, ‘ஷாஹி’ மசூதி என்ற பெரிய மசூதி செயல்பட்டு வருவதால், தொழுகை நடத்த விரும்புவோர் அந்த மசூதியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.