மழை பெய்யாமலேயே சாலையில் வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை அருகே உள்ள கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றப்பட்ட மழைநீர், சாலையில் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டில் மாம்பலம் நெடுஞ்சாலை உள்ளது. ரயில்வே பாதையின் மறுபுறம் உள்ள சுப்பிரமணிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ரயில்வே கல்வெட்டு வழியாக வரும் மழைநீர், இச்சாலையில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின், மின் மோட்டார் மூலம் ராமச்சந்திரா தெருவில் உள்ள மழைநீர் வடிகாலுக்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்காக அருகே கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால், கிணற்றில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.

இதையடுத்து, நேற்று மாலை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் மாம்பலம் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடி, ராமச்சந்திரா தெரு வரை குளம்போல் தேங்கியது. மழை இல்லாத நிலையில், சாலையில் திடீரென தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதனால், சுரங்கப்பாதை கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், நேரடியாக மழைநீர் வடிகாலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement