மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர்கள் முற்றுகை

வாடிப்பட்டி: கட்டக்குளம் கண்மாயில் முறைகேடாக மணல் அள்ளுவதாகக் கூறி, டிராக்டர்கள், மணல் அள்ளும் இயந்திரத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இங்கு கட்டக்குளம் கண்மாயில் விவசாய நிலங்களுக்கு வண்டல்மண் எடுப்பதாக கூறி மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பல டிராக்டர்களில் கிராவல் மண் அள்ளப்பட்டது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ‘பிளாட்டுகளுக்கு மண் அள்ளுவதாகக் கூறி’ அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் அவர்கள் மண்ணைக் கொட்டி விட்டு டிராக்டர்களுடன் தப்பியோடினர்.

பொதுமக்கள் கூறியதாவது: விவசாயிகளின் பெயரில் போலியாக வண்டல் மண் அள்ளுவதாக அனுமதி பெற்று பிளாட்டுகள் அமைக்க கிராவல் மண்ணை திருடிச் செல்கின்றனர். இதுகுறித்து கேட்டால் எங்களை அலைபேசியில் தொடர்பு கொள்வோர் 'எம்.எல்.ஏ., பி.ஏ., பேசுகிறேன்' எனவும், டிராக்டர்களை ஏற்றிக் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement