தனியார் லேஅவுட்களை குறி வைத்து சுற்றித்திரியும் கொள்ளை கும்பல்

ஓசூர்: ஓசூரில், தீபாவளி போனசை குறி வைத்து கொள்ளையடிக்க, தனியார் லேஅவுட்டில் சுற்றித்திரியும் கொள்ளை கும்பல் நேற்று, ஒரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி உடைக்க முயன்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தளி சாலையில், கர்னுார் அருகே சாந்தி நிகேதன் மற்றும் மஞ்சுநாதா என, இரு தனியார் லேஅவுட்டுகள் உள்ளன. இங்கு, நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று அதிகாலை, 2:15 மணி முதல், 3:00 மணி வரை, சாந்தி நிகேதன் லேஅவுட்டில், முகமூடி அணிந்த, 3 பேர் கும்பல், போர்வை போர்த்தியபடி வீடுகளை நோட்டமிட்டது. தொழிலாளர்கள் தீபாவாளி போனஸ் வாங்கியிருப்பர். அதனால் வீடுகளுக்குள் புகுந்து, பணம், நகையை கொள்ளையடிக்கலாம் என்ற கோணத்தில், கொள்ளை கும்பல் களமிறங்கியது.

ஆனால், எந்த வீட்டிலும் நுழைய முடியாததால், அருகிலுள்ள மஞ்சுநாதா லே அவுட்டிற்கு சென்ற மர்ம கும்பல், ஒரு வீட்டின் மரக்கதவை அரிவாளால் வெட்டி உடைத்து திறக்க முயன்றது.

அதற்குள் வீட்டிற்குள் இருந்து ஆட்கள் சத்தம் போட்டதுடன், வெளியே உள்ள மின் விளக்கை போட்டதால், சிக்கிக் கொள்வோம் என பயந்த மர்ம கும்பல் தப்பியது.

அப்போது, கதவில் சிக்கிய அரிவாளை, அப்படியே விட்டுச்சென்றது. வீட்டிற்குள் இருந்தவர்களால் வெளியே வர முடியாத நிலையில், அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து, கதவை திறந்து, அந்த குடும்பத்தினரை வெளியே வரவழைத்தனர்.

இந்த, இரு லேஅவுட்டுகளிலும் மர்ம கும்பல் நடமாட்டம் குறித்த, ‘சி.சி.டி.வி’ கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதை கைப்பற்றி, மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, ஓசூரில் பணியாற்றும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அதை பயன்படுத்திக்கொள்ள கொள்ளை கும்பல், தற்போது ஓசூரில் களமிறங்கியுள்ளது. தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் மக்களின் வீடுகளை குறி வைத்து, திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற கொள்ளை கும்பல் தயாராகி உள்ளது.

எனவே, போலீசார் இரவு ரோந்து பணியை அதிகப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஊருக்கு செல்லும் மக்கள், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்க, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement