வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்
கரூர்: கரூர் அருகே, வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர், வாங்கப்பாளையம் எஸ்.பி., காலனி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் நடேசன், 62. இவர், நேற்று முன்தினம் இரவு அவரது அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காசோலை வழக்கு தொடர்பாக அங்கு சென்ற, கரூர் சுக்காலியூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன், 45, என்பவருக்கும், நடேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சத்தியசீலன், நடேசனை தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த நடேசன், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை கரூர்–வெள்ளியணை சாலையில் உள்ள நீதிமன்றம் முன், வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில், நடேசனை தாக்கிய சத்தியசீலனை கைது செய்யக்கோரி, வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சம்பவ இடத்துக்கு சென்ற தான்தோன்றிமலை போலீசார், சத்தியசீலனை கைது செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, தெரிவித்தனர். இதையடுத்து வக்கீல்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர்.