தலைக்கு 5 ஆயிரம் டாலர் வாக்குறுதி அளித்தும் பயனில்லை; டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணங்கள் இதோ!

12

அமெரிக்க தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் மெஜாரிட்டியை இழந்திருக்கிறது.

பல மாநிலங்களில் நீண்ட காலத்துக்கு பிறகு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், கடந்த 2 ஆண்டுகளாக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட தான்தோன்றித் தனமான செயல்கள் தான் என்பதே வாக்காளர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் அமெரிக்கா செய்யும் வர்த்தகம் சமநிலை இன்றி இருப்பதாக கூறிய டிரம்ப், அதை ஈடுகட்டுவதற்காக அந்தந்த நாடுகளுக்கு வரி விதித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதிப்பதாகவும் அறிவித்தார். அவரது தடாலடி வரி விதிப்புகளால் பாதிக்கப்படாத நாடுகளே இல்லை. அந்த வரி விதிப்பால், பாதிக்கப்பட போவது அமெரிக்க நுகர்வோர் தான் என்பதை அவர் உணரவே இல்லை.

கனடாவை தங்கள் நாட்டுடன் இணைய வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி, அந்நாட்டு தலைவர்களிடம் வம்பிழுத்தார்.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை பற்றி தாறுமாறாக பேச ஆரம்பித்தார். நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

வெனிசுலா அதிபரை நாடு புகுந்து கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தார். கியூபாவுக்கும் மிரட்டல் விடுத்து வருகிறார்.

நோபல் பரிசு தனக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறி, அவர் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவதும், பேசி வருவதும், உலக அளவில் கேலிக்கூத்தாக மாறி வருகிறது. தான் பல போர்களை நிறுத்தி விட்டதாக கூறி, தனக்கு நோபல் பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர் வற்புறுத்துவது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது திடீர் கோரிக்கை, ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தேவையற்ற போர்களில் ஈடுபட்டதாக, முந்தைய ஆட்சியாளர்கள் மீது குற்றம் கூறி வந்த டிரம்ப், இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தார். இதுவும் அவரது முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகளுக்கு உதாரணமாக அமைந்தது.

உக்ரைன் -ரஷ்யா போர் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நிலைப்பாடுகளை எடுக்கும் டிரம்ப் முடிவு, உக்ரைனுக்கும், அந்நாட்டை ஆதரிக்கும் பிற நாட்டினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா சபையின் துணை அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகள், சர்வதேச ஒப்பந்தங்கள், கூட்டணிகளில் இருந்து டிரம்ப் உத்தரவுபடி அமெரிக்கா வெளியேறி உள்ளது.

இது மட்டுமின்றி, சீனாவுக்கு ஆதரவு, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவு போன்ற டிரம்ப் அரசின் சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகள், வாக்காளர்கள் மத்தியில் அவர் மீது அவநம்பிக்கையை அதிகரித்து விட்டன.

இடைக்கால தேர்தலில் தான் வெற்றி பெறுவது சிரமம் என்பதை உணர்ந்த டிரம்ப், திடீரென தடாலடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தன் கட்சி வெற்றி பெற்றால், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், அந்த அறிவிப்பை அமெரிக்கர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

Advertisement