லண்டனில் சர்வதேச வர்த்தக மாநாடு புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு
புதுச்சேரி: லண்டனில் நடக்கும் உலக வர்த்தக மையத்தின் சர்வதேச வர்த்தக மாநாட்டில் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பங்கேற்றார்.
லண்டனில் 3 நாட்கள் நடக்கும் உலக வர்த்தக மையத்தின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். இதில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுதா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வர்த்தக மாநாட்டில் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில், ஸ்டால் அமைத்துள்ளது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகத் துறை பிரதிநிதிகளுடன் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தக முதலீடுகளை செய்வதற்கும் அழைப்பு விடுத்தார்.
முதலீடு செய்ய வரும் தொழிலதிபர்களுக்கு புதுச்சேரி அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார். புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களின் சிறப்புகளும், வெளிநாடுகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
மாநாட்டில் சுற்றுலாத்துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, புதுச்சேரி வர்த்தகக் கூட்டமைப்புத் தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.