மதுரை ஆவினுக்கு தீபாவளி இலக்கு ரூ.7.15 கோடி: விற்பனையை அதிகரிக்க ஜரூர்

மதுரை: மதுரையில் ஆவினின் ஸ்வீட், காரம் விற்பனையின் இலக்கு இந்தாண்டு ரூ.7.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், பால் கொள்முதல், விற்பனைக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதுபோல் பண்டிகை காலங்களில் பாலுடன், பால் பொருட்கள் விற்பனைக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு தீபாவளிக்கு மதுரை ஆவினின் விற்பனை இலக்கு ரூ.6 கோடி. அதை அடைந்த நிலையில், இந்தாண்டு ரூ.7.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையும் எட்ட பல்வேறு ஆவின் அலுவலர்கள் குழுக்களை பொது மேலாளர் முத்து மாதவன் ஏற்படுத்தியுள்ளார்.

மார்க்கெட்டிங் அலுவலர்கள் கூறியதாவது: தீபாவளிக்காக மதுரை ஆவினில் மைசூர் பாகு, பால் கோவா தயாரிக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து அல்வா, சென்னையில் இருந்து ஆவின் தயாரித்த 6 வகை ஸ்வீட்டுகள், காரங்கள் இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளன.

மதுரையில் 900க்கும் மேற்பட்ட பால் டிப்போக்கள், அரசு கூட்டுறவு சங்கங்கள், ஆவின் மண்டல அலுவலகங்களில் இவை விற்கப்படுகின்றன. தவிர சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பிற ஆவின் ஒன்றியங்களுக்கும் மதுரையின் மைசூர் பாகு, பால்கோவா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு விற்பனை இலக்கு 25 டன். தற்போது வரை 23 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக ஸ்வீட், காரம் வாங்கும் தனியார், அரசு நிறுவனங்களுக்கு தள்ளுபடியிலும் வழங்கப்படுகிறது. இதனால் ஆவின் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம் ரூ.7.15 கோடி விற்பனையை எட்டுவோம் என்றனர்.

Advertisement