விதைகளை தின்று தீர்க்கும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் கருப்பு வாத்து பறவைகள் விதைகளை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு என்.எல்.ஆர்., கோ 52, கோ 51, டி.கே.எம்., ஆர்.என்.ஆர்., போன்ற நெல் ரகங்கள் நேரடி விதைப்பு மூலம் விதைக்கப்படுகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் அமைத்து நெல் சாகுபடி செய்வது வழக்கம், கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்மாய்களிலும் தண்ணீர் இல்லாத நிலையில் நேரடி விதைப்பிற்காக பம்ப்செட் விவசாயிகளிடம் தண்ணீர் பணம் கொடுத்து வாங்கி பாய்ச்சி விதை துாவியுள்ளனர்.

மதிய நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் வயலில் இறங்கி விதை நெல்லை தின்று விடுகின்றன. சற்று வளர்ந்த நாற்றுக்களை காலால் அழுத்தி செடிகளை முறித்து விடுகின்றன. பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளதால் போதிய உணவு கிடைக்காமல் பறவைகள் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இறங்கி சேதப்படுத்துகின்றன. விதை துாவி நன்கு முளைத்து வரும் தருணங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து நாசப்படுத்துவதால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். ஏக்கருக்கு தற்போது வரப்பு வெட்ட, உழவு செய்ய என ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் பறவைகள் விதைகளை தின்று தீர்ப்பதால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில்,

வயலில் குறைந்தபட்சம் 50 முதல் 100 பறவைகள் வரை இறங்குகின்றன. இவற்றை விரட்டவே முடிவதில்லை. கோடை வெயில் காரணமாக நிழலில் அமர்ந்து காவல் இருந்தாலும் இவைகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றனர்.

Advertisement